மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் விரிவாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.


பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாடு தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (10) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.


இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
“முன்னைய காலங்களில் மாணவர்கள் பாடசாலையில் அல்லது பாடசாலைச் சூழலில் தங்கள் நேரங்களைச் செலவிடுவதே அதிகமாக இருந்தது.
அதனால்தான் அவர்களால் பல்வேறு துறைகளிலும் சாதிக்க முடிந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. மாணவர்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ தூரநோக்கான இலக்குகள் இல்லை. அதேபோன்று, முன்பு மிகவும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர் சமூகம் ஒன்று இருந்தது. இன்று அந்த அர்ப்பணிப்புக்களும் குறைந்துவிட்டன.

இன்று மாணவர்கள் நடப்பதற்குக்கூட சிரமப்படுகிறார்கள். பெற்றோர்கள் காலை 7.30 மணிக்கு பாடசாலை வாயிலில் பிள்ளைகளை இறக்கிவிட்டு, மீண்டும் பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை வாயிலில் காத்திருக்கிறார்கள். மாணவர்களைச் சிறிது தூரம் நடக்கவிடக்கூட பெற்றோர்கள் தயாரில்லாத நிலையே காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு உளநல மேம்பாடு தொடர்பான இத்திட்டம் மிகவும் அவசியமானது. சமூக மட்டத்தில் உளவளத்துணை தொடர்பாக ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது மாற்றப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” – என்றார்.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி, ஆளுநர் செயலக உதவிச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !