இலங்கை
Trending

மூதூரில் தன்னார்வத் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவக் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ப்தி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

திருகோணமலை மூதூரில் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும், அதனோடு தொடர்புடையவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மீனாட்ஷி கங்குலி மற்றும் அதன் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கையூடாக இந்த. அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர்.

மூதூர்ப் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, பிரான்ஸைச் சேர்ந்த Action Against Hunger என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள போதிலும், இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.

இலங்கை அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மூதூர் பகுதியில் தீவிர மோதல் இடம்பெற்ற காலத்தில், சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இந்தப் பணியாளர்கள் தமது அலுவலக வளாகத்துக்குள் முடங்கினர்.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி இராணுவத்தினர் அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 17 பணியாளர்கள் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயங்களோடு சடலமாக மீட்க்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்துக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரச தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரிய மனித உரிமைகள் அமைப்பின் விரிவான புலனாய்வு அறிக்கைகள், இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு தொடர்பிருப்பதாகவும், அதனைமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தன.

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சம்பவம் தொடர்பாக ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் விசாரணை நடத்த உறுதியளித்த போதிலும் இதுவரை உரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால காத்திருப்புக்கு முடிவுகட்டும் வகையிலும், போர்க்கால மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரணை செய்யவும் சுயாதீன அரச வழக்குரைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button