
2027 பெப்ரவரி 14 முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள முதலாவது ICC மகளிர் வெற்றிக்கிண்ண தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தற்போது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போட்டி நடத்தும் உரிமையை மாற்றுவது தொடர்பாக ICCயிடமிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
“தற்போதைய நிலையில் இலங்கையே போட்டியை நடத்தும் நாடாக உள்ளது” என இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான பிரச்சினை தொடருமானால், 2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இழந்ததைப் போன்று மற்றுமொரு சர்வதேச தொடரை இலங்கை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





