நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைன் முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்குத் தாக்கல்!

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
உக்ரைன்–ரஷ்யா போர் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்டிக் கடலுக்கடியில் அமைந்திருந்த நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயை தகர்க்கும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறப்படும் 7 பேர் கொண்ட குழுவை வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜேர்மனியின் முன்னணி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதற்கமைய கைது செய்யப்பட்டவர் 50 வயதுடைய செர்ஹி K. என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்ஹி K. கடந்த 2025 ஆம் ஆண்டு இத்தாலியில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் முக்கிய கடலடி உள்கட்டமைப்பாகும்.
இந்த அமைப்பிலிருந்த நான்கு குழாய்களில் மூன்று, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வெடிப்பில் சேதமடைந்தன.
அந்த நேரத்தில் அவை செயற்பாட்டில் இல்லாவிட்டாலும், ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் கட்டமைப்பாக அவை கருதப்படுகின்றன.
இதனிடையே, இந்த வெடிப்பு சம்பவத்துடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று செர்ஹி K. மறுத்துள்ளார்.





