
உலகின் மிக அழகான தீவாக இலங்கை அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் “50 சிறந்த தீவுகள்” வருடாந்த பட்டியலில், இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.


பிரான்ஸ் பொலினீசியாவின் மோரியா தீவு மற்றும் ஈக்வடாரின் கலாபகோஸ் தீவு போன்ற பிரபலமான இடங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த உயரிய இடத்தை இலங்கை பெற்றுள்ளது.
இலங்கையின் 1,300 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுள்ள கடற்கரைகள், மிரிஸ்ஸ, உனவடுன, பெந்தோட்டை, அறுகம்பே மற்றும் பாசிக்குடா போன்ற பிரபல சுற்றுலா தலங்கள் உலகளாவிய பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.
அத்துடன் சிகிரியா, தம்புள்ளை குகைக்கோயில், கண்டி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற வரலாற்று மற்றும் ஆன்மீக நகரங்களும் இலங்கையின் முக்கிய ஈர்ப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
யால தேசிய பூங்காவில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் காணப்படும் அனுபவம், மிரிஸ்ஸ மற்றும் கல்பிட்டியில் திமிங்கிலங்களை காணும் வாய்ப்பு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுலா அம்சங்களும் இலங்கையின் மதிப்பை உயர்த்தியுள்ளன.
மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்கள், கண்டி–எல்ல தொடருந்து பயணம் மற்றும் மூடுபனி சூழ்ந்த மலைப்பகுதிகள் ஆகியவை இலங்கையின் இயற்கை அழகை மேலும் பிரதிபலிக்கின்றன.
இந்த தரவரிசை, முந்தைய ஊடக மதிப்பீடுகள், சமூக வலைத்தளங்களில் இலங்கையின் பிரபலம் மற்றும் சமகால பயணிகளின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவம், உலக சுற்றுலா வரைபடத்தில் இலங்கையின் நிலையை மேலும் உயர்த்துவதுடன், நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முக்கியமான மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.





