இலங்கை
Trending

குகன்,லலித் வழக்கில் நிகழ்நிலையில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு யாழ்.நீதிமன்றம் அனுமதி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பாக சாட்சியங்களை நிகழ்நிலையில் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

அந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் கோட்டாபய ராஜபக்‌ஷவை மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில் வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபாய ராஜபக்ஷ, நிகழ்நிலையில் (online) தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக விண்ணப்பம் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் வருகை தருவதிலுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக சத்திய கடதாசியை சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று (02) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்‌ஷ நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்ய மன்று அனுமதித்துள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button